
அன்புடையவளுக்கும் அன்புக்குரியவளுக்கும்
SHARE
About the Book
என்னுரை
வாசக நேசர்களுக்கு வணக்கம்...!
எல்லோர்க்குள்ளும் எவராலேனும் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்குள்ளும் அப்படி ஓர் எண்ணம் கடல் அலையாய் ஆர்ப்பரித்தது. ஆம், நான் ஒரு எழுத்தாளனாகவோ கலைஞனாகவோ கவனிக்கப்பட வேண்டும் என்ற கனவு கண் தோன்றியது. அந்த கனவின் விளைவே அன்புடையவளுக்கும் அன்புக்குரியவளுக்கும். கவிஞர் சொன்னதைப் போல் ஒரு புத்தகத்தை வெளியிடுவதென்பது வயிற்றில் உதைக்கும் பிள்ளையை பிரசவிப்பது போலத்தான் வலி மிகுந்தது. அந்த வலியெல்லாம் தனது எழுத்தை புத்தகத்தில் பார்க்கும் வரைதான். தன் புத்தகக் குழந்தை பலரால் பாராட்டப்பெறும் போது விமர்சிப்புக் குள்ளாகும் போதும் வருகிற உணர்வுப் பெருக்கிற்கு உலகைக் கொடுத்தாலும் ஈடாகாதென்பது நான் பார்த்துணர்ந்த உண்மை.
"அடியாத பிள்ளை படியாது; அஃதே விமர்சிக்கப்படா புத்தகம் படியாதே". எல்லா எழுத்தாளனும் இலக்கிய பூமியில் விழும் கரித்துண்டே. அவனை வைரமாக்குவதெல்லாம் விமர்சன அழுத்தமே ஆதலால் விமர்சனப் புருசர்களே இந்த அன்புடைய அன்புக்குரியவளை உங்களின் பேனா முனை கொண்டு கீறுங்கள்.
மேலும், வாசிப்பின் இன்பத்தைப் போல் பேரின்பம் இந்த உலகில் பிரிதில்லை. ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும் போதும் நாம் புதிதாய் புதிய உலகில் பிறக்கிறோம். யாரோ சொன்னதைப் போல் அணுகுண்டு கூட ஒருமுறை தான் வெடிக்கும். ஆனால் புத்தகம் வாசிக்கும் போதெல்லாம் வெடிக்கும். நமக்கு வாய்க்கிற வாழ்க்கைத் துணையைப் போல் நாம் வாசிக்கிற ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் வல்லமை உடையது. ஆம், என் முதல் காதலியும் ஏன் மனைவியும் கூட புத்தகம் தான்.
இந்த நூல் வெளியாவதற்கு எனது பங்களிப்பை விட என்னைச் சார்ந்தவர்களின் பங்களிப்பே அதிகம். அவர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டால் பக்கம் பக்கமாய் நீளும். என்னை எழுத்தாளனாய் உருவாக்கியவர்கள், ஊக்குவித்தவர்கள், எனக்கு அனுபவம் போதித்தவர்கள், நிதியளவில் உதவியவர்கள், நித்தமும் என் புத்தகம் வெளியாகும் நாள் எதிர்பார்த்தவர்கள் என நேரடியாயும் மறைமுகமாயும் தொடர்புடையோர் ஏராளம். அவர்களை எல்லாம் நான் வாழும் காலம் வரை வணங்க வேண்டும். மறக்காமல் மனம் தினம் நினைக்க வேண்டும்.
அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகளுடன்
விமர்சன விரும்பி
ர. அஜித்குமார்
(இந்த கவிதைகளில் சில என் முகநூல் பக்கத்திலும் தினத்தந்தியில் திங்கள்தோறும் வரும் சிறப்பிதழிலும் வெளியானவை.)