
SHARE
About the Book
எல்லோர் துயரும் என் துயரே
வாசக நேசர்களுக்கு என் வணக்கங்கள். வாசித்தல் என்பது தனக்குள்ளாகப் புதியதோர் உலகை அன்பிலும் அறிவிலும் என் அனைத்திலும் முதிர்ந்த 'நம்மை' உருவாக்கிக் கொள்ளுதல் அல்லது காணுதல் எனவே, எப்போதும் வாசித்தலைக் கைவிட்டு விடாதீர்கள். வாசிப்பு உங்களையும் உங்கள் உலகையும் தினந்தினம் புதிதாக்கும். அதாவது. அறிவில் எவர் முன்னோக்கி பயணிக்கிறாரோ, அறிதலின் வழி எவர் பயணப்பட தொடங்குகிறாரோ, எவர் கற்றலைக் கைவிடாமல் இருக்கிறாரோ அவரே இந்த உலகில் வாழவும் உலகை ஆளவும் தகுதியானவர். அதனால் தோழர்களே, எப்போதும் அறிவைத் தேடி பயணியுங்கள்; ஓடுங்கள். அதுவே, உங்களையும் உங்கள் மனதையும் பலப்படுத்தும். நம் மனம் என்பது ஒரு உறுப்போ அல்லது நாம் பிறக்கும் போதே நம்மோடு பிறந்த, வடிவமற்ற மாய வஸ்துவோ அல்ல. அது நாம் கண்டு கேட்டு நுகர்ந்து உணர்ந்து கற்று வந்த அறிவின் அற்புதத் தொகுப்பு. ஆக அதை அறிவின் வழியே அறிதலின் வழியேதான் பக்குவப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் முடியும். அதுமட்டுமின்றி. இப்போது நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு சொல்லும், பொருளும் ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகளாய்ச் சேகரித்து வந்த அறிவுத் திரட்சியின் அத்தாட்சியே. எனவே, நிறைய வாசியுங்கள். நிறைய கற்றுக் கொள்ளுங்கள். நிறைய சிந்தியுங்கள். அவ்வாறு கற்று, சுற்றதைத் தொடர்ந்து சிந்தித்து. மார்க்ஸ் சொன்னபடி, மனித சிந்தனை தோற்றுவித்திருக்கும் யாவற்றையும் மறுபரிசீலனை செய்யுங்கள். விமர்சனத்துக்கு உட்படுத்துங்கள். மாற்றி அமையுங்கள். (மனம்) தொய்வற்று இயங்குங்கள். மற்றும் நீங்கள் இந்தச் சமூகத்தில் காண அல்லது ஏற்படுத்த விரும்புகிற மாற்றங்கள் நீங்கள் சொன்னவுடனோ நினைத்தவுடளோ தடாலடியாக நடந்துவிடாது. மாற்றம் என்பது ஒரு விதை மரமாவது போலானது. அதற்கு நேரமும் பொறுமையும் மிக மிக அவசியம். அதுவரை, சமூகத்துடன் அன்போடும் அறிவோடும் தொடர்ந்து உரையாடுங்கள்.
மேலும், இந்தத் தொகுப்பை வாசிக்கிற உங்களால் ஏதாவது ஒரு விசயத்தைப் புதிதாக கண்டறியவோ காணவோ முடிந்தால் அதுவே இந்தத் தொகுப்பின் வெற்றி என்று கருதுகிறேன். வாசித்த பிறகு உங்களின் அன்பையும் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இவை மட்டுமன்றி, ஒரு விசயத்தை இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும் எனது கவிதைகளும் துயரந்ததும்பும் கோப்பைகளாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு அல்லது விமர்சனம் இருக்கிறது. அந்தத் துக்கங்கள் எல்லாம் என்னுடையவை மட்டுமே இல்லை. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா என்று தெரியவில்லை. "நாம் ஒன்றிற்கு பெயரிடுவது அதை நம்மில் இருந்து வேறொன்றாகப் பார்ப்பதன் வெளிப்பாடு". ஆனால் என்னால் அப்படிப் பெயரிட முடிந்தாலும், என்னில் இருந்து வேறாகப் பார்க்க முடிவதில்லை. உடம்பின் அத்தனை பாகங்களுக்கும் கண், காது, வாய், மூக்கு என்று தனித்தனிப் பெயர் வைந்தாலும் அவை எல்லாமும் தான் என்பதன் ஒரு ஒரு அங்கம்தான் இல்லையா?
அப்படித்தான் உங்கள், எல்லோரின் துயரமும் எனதாகவே படுகிறது எனக்கு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் போலே, நான் கண்டு கேட்ட துயரங்களுக்காக நானும் என் எழுத்தும் சேர்ந்து அழுததன் வெளிப்பாடே இந்தத் துயரக் கவிதைகள். தோழர்களோ! நான் இந்த உலகின் சகல பேர்களையும் உயிர்களையும் காதலிக்கிறேன். உயிர்களிலும் உண்மையிலும் எப்படிச் சிறியது பெரியது என்கிற வேறுபாடு இல்லையோ அப்படியே, துயரத்திலும் இது சிறியது இது பெரிய என்று அளவிட முடியாது. அதனாலே அடுத்தவர் துயரங்கள் அதுவும் எளிய துயரங்கள் கூட ஏதோ எனது போலவே என்னைப் பாதித்து கவிதை கண்ணீராகக் கசிந்து விடுகின்றன.
உண்மையில் லகின் அத்தனை பேருக்கும் அவர்களுக்கு வேண்டிய அளவைவிடவும் அதிகமாக இருப்பது துயர்; அதுபோலவே, அவர்களுக்குப் போதாத அளவுக்கு இருப்பது அன்பு. அதனாலே நான் துயரங்களைக் கொண்டாடவும் அன்பிற்கு விளம்பரமும் செய்கிறேன். உலகில் எல்லா நிலத்துக்கும் உயிருக்கும் பொதுவான ஓர் அறம் உண்டு என்றால் அது அன்பாக மட்டும்தான் இருக்க முடியும். ஆக முடிந்த மட்டும் சக உயிர்களிடத்தில் அன்பாக இருங்கள். புத்தர் சொன்னபடி அன்பை உணர்வதும் உணர்த்துவதுமே வாழ்க்கை அன்போடு வாழுங்கள். ஐ லவ் யூ க்களுடன் நான்.